எனது இறை வழிபாட்டு நிலை..... ......
வணக்கம்.
எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது தர்க்க புத்திதான்.
ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் உண்டு. கும்பிடும் வேளை ஒரு மன அமைதி கிடைத்தாலும், நீ பெறுவது ஒரு போலிப் பாதுகாப்பு உணர்வுதான் என்று எனது தர்க்க மனது விழித்துக்கொள்ளும்.எனது உறவினர்களின், தெரிந்தவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக அவதானித்த வரை அவர்கள் மலைபோல் சந்தித்த துன்பங்களை எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டு இலகுவாக கடந்துவந்திருப்பதனை அறிவதனால் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரு முனைவுகளுக்கு அப்பால் இறை நம்பிக்கை தனிமனிதனைப் பொறுத்தவரை பயனுடையது என்றே எண்ணுகின்றேன்.
இக்காரணத்தால் நான் கடவுள் நம்பிக்கையாளர்களிடம் எனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக பிரச்சாரம் செய்வது கிடையாது. யாராவது என்னை நீங்கள் நாத்திகனா என்று வினவும்போது அவர்களுக்குத் தக்கபடி “நான் அப்படிச் சொன்னேனா?” என்றோ அல்லது “அது நீங்கள் எவ்வாறு கடவுளை வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது” என்றோ கூறி நழுவிவிடுவேன்.
நான் என்னை ஒரு இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்த விரும்பாமைக்கு அது என்னை எனது மரபில் இருந்து துண்டித்து விடுகின்றதோ என்ற எச்சரிக்கை உணர்வும் இன்னுமொரு முக்கியகாரணம்.
சைவ சித்தாந்தம் போன்ற தத்துவச்சாதனைகளையும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களையும், பண்ணிசையில் இருந்து வளர்ந்த கர்நாடக சங்கீத்தையும், இன்றும் ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிநிற்கும் கோயில் ஒவியங்களையும், அற்புதமான சிற்பங்களையும், கட்டிடப் பொறியியலின் சாதனைகளாக நின்றுகொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களையும் மேலை நாட்டவர்களுக்கு சில நூறாண்டுகளுக்கு முன்பே ஆயிரம்,ஆயிரம் மைல்களைக் கடந்து கடற்படை அனுப்பி வெற்றிபெற்ற ராஜராஜன்,ராஜேந்திரன் போன்ற பெருமன்னர்களில் இருந்து இறை நம்பிக்கையாளர்களான எனது எளிய உறவினர்கள் வரையிலானவர்களையும் கொண்ட எனது மரபை மறுத்து ஒரு பண்பாட்டு சுடுகாட்டிலும் நான்தான் புத்திசாலி என்ற ஆங்காரத்தின் உச்சியிலும் நாத்திகவாதி என்ற அடையாளம் என்னை கொண்டுபோய் சேர்த்துவிடுமோ என்ற அச்சம் எனக்குண்டு.
ஆயினும் எனது அடிப்படையான இயல்பின்படி நான் மதநம்பிக்கையை ஏற்றுக்கொண்டவனும் கிடையாது. சமூகத்தில் எமக்கு இனம் சார்ந்து, மதம் சார்ந்து, சாதி சார்ந்து நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடையாளங்கள் அமைந்துவிடுகின்றன.ஆனால் நாம் எம்மை எப்படி அடையாளப்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது என்று நினைக்கிறேன். என்னை எப்போதும் தமிழன் என்று மட்டுமே அடையாளப்படுத்தி வந்துள்ளேன்.
ஆனால் எவராலோ குறிப்பாக எனது மத அடையாளம் கேட்கப்படும்போது பதில் அளிப்பது சிக்கலாகிவிடுகின்றது.இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்தவும் விரும்பவில்லை. அதேவேளை நெறி சார்ந்து இந்து என்றோ துறை சார்ந்து சைவம் என்றோ அடையாளப்படுத்துவது மேலதிக விளக்கங்கள் அளிக்கப்படாதவிடத்து பின்பற்றும் ஒருவர் என்ற போலி அடையாளத்தை தோற்றுவிப்பதாகிவிடுகின்றது.
தெளிந்த சிந்தனை உடய யாரேனும் விளக்கம் கொடுத்தால் மகிழ்வுருவேன் .